search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி சாமியார்"

    அசாதாரண சூழல்களாலும், இயற்கை சீற்றங்களாலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் நடந்துவரும் ஆட்சிக்கு பேராபத்து ஏற்படும் என்று சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் கூறி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீபிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாசசித்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தற்போது நிலவிவரும் கிரக சூழ்நிலைகள் மற்றும் தோ‌ஷங்களின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த வருடத்தில் இதுபோன்ற பேரழிவிற்கான இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று முன்கூட்டியே சித்தர்கள் கணித்துள்ளனர்.

    கிரக சூழ்நிலைகளால் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலின் மேற்கூரை திடீரென்று உடைந்து விழுந்தது. திருச்செந்தூரில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலுள்ள பல்வேறு ஆன்மீக சிறப்புபெற்ற கோவில்களிலும் இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறி வருவது தொடர்கதையாகி விட்டது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.



    ஆன்மீக சிறப்புபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோவில் சேதமடைந்தது பக்தர்கள் மனதில் மிகுந்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்தமிழகத்தில் மிகவும் சிறப்புபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட யானை மசினி தன்னை வளர்த்து பராமரித்த பாகனையே திடீரென்று கோவில் வளாகத்தில் தாக்கி மிதித்து கொன்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்ரீரங்கம் கோவில் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    ஆன்மீக சிறப்புபெற்ற ஸ்தலங்களில் எல்லாம் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இதுபோன்ற நிகழ்வுகள் பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் பேரணியில் திடீரென்று கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தினை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் விரும்பத்தகாத நிகழ்வுகள் முடிவில்லாமல் தொடர்ந்து அரங்கேறி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அமைதியின்றி முடங்கி போய் கிடக்கிறது.

    கிரகங்களின் மாறுபட்ட கோணத்தாலும், தோ‌ஷங்களாலும் தமிழகத்தில் இந்த வருடத்தில் தீ மற்றும் கடும் மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது இந்த வருடம் இயற்கை சீற்றங்கள் கடந்த காலங்களை காட்டிலும் மிகவும் அதிகமான அளவில் இருக்கும். இதுபோன்று தற்போது கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் போன்ற கொடிய நோய்களும் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தண்ணீர், தீ மற்றும் கொடிய நோய்களால் ஏற்படும் அழிவிற்கு அறிகுறியாகத்தான் ஆங்காங்கே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகிறது.

    இதுபோன்ற அசாதாரண சூழல்களாலும், இயற்கை சீற்றங்களாலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் நடந்துவரும் ஆட்சிக்கு பேராபத்து ஏற்படும் அபாயசூழல் ஏற்பட்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கிரக தோ‌ஷங்களின் அடிப்படையில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படுவது நிச்சயமாகும். இந்த மாற்றம் ஆட்சியை மாற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    தற்போதுள்ள சூழலில் தமிழகத்திலுள்ள கோவில்களில் ஏற்பட்டுவரும் திடீர் திடீர் விபத்துக்களை தடுத்திடவும், வரும் நாட்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதை தடுத்திடவும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் அம்பாள் மற்றும் கோவில் வழிபாடுகளை சிறப்பாக மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    அதாவது ஒவ்வொருவரும் தங்கள் பகுதியிலுள்ள கோவில்களுக்கு சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் அம்பாளை மனம் குளிர ஐந்துமுக நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லபலன் தரும். அம்பாள் மற்றும் இயற்கைக்கு உரிய கடவுள் வழிபாடுகளையும், சித்தர் வழிபாடுகளையும் பக்தர்களும், ஆன்மீக அன்பர்களும் திருப்திகரமாக செய்திடும் பட்சத்தில் கிரகதோ‌ஷங்களில் இருந்து ஓரளவிற்கு நிவர்த்தி பெறலாம். இதன்மூலமாக தமிழகமும் எந்தவிதமான ஆபத்துக்களும், வன்முறைகளும் இன்றி அமைதிப்பூங்காவாக திகழ்ந்திடும். மேலும், வரும் நாட்களில் நிகழ இருக்கும் இயற்கை சீற்றங்களின் தாக்குதல்களையும் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×